மது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது?
நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக் கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.
சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.
உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)
கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?
அதனால்தான் அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.
சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.
அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.
BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்.
BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய்விடும்.
BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார். பார்வை தெளிவாக இருக்காது. பேச்சுக் குளறும். உடலின் Reflex செயல்படாது. தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். வலி தெரியாது.
BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார். எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பிவிடலாம்.
BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும். மூச்சு விடுதல் குறைந்து போகும். இதயத் துடிப்பு குறைந்து விடும். இறந்து போக அதிக வாய்ப்புள்ளது.
மதுவை ஒழிப்போம்.
No comments:
Post a Comment