.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday, 17 September 2016

பேரறிஞர் அண்ணா .

பேரறிஞர் அண்ணா .

அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!
* சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் 'தளபதி'. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் 'அண்ணா'தான்!
* பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது!
* ''என் வாழ்க்கையில் நான் கண்டதும்கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்'' என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து, தனிக் கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை!
* இரண்டு மயில்கள், இரண்டு மான்கள், புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!
* அண்ணா - ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!
* தினமும் துவைத்துச் சுத்தப்படுத்திய வேட்டி - சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் 'வெள்ளையான சட்டை' அணிந்தார்!
* தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ''என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று சொல்லிக்கொண்டார்!
* காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு - மூன்றும்தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!
* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தன!
* நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ''என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம். நூல் அறுந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்'' என்பார்!
* புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ''நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்'' என்றார்!
* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ''காலமோ சித்திரை... நேரமோ பத்தரை... உங்களுக்கோ நித்திரை... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை'' என்பதே அந்தப் பேச்சு!
* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!
* தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போடியிட்டவர் அண்ணா!
* உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு, ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான். மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார். இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!
* 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்', 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு', 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'மறப்போம் மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'சட்டம் ஒரு இருட்டறை', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!
* தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்துவிடுவார்!
* மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்ஷாப், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின்ப
டி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்!
* பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார். யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது!
* முதலமைச்சர் ஆனதும், அதுவரை தன்னை எதிர்த்து வந்த பெரியார், காமராஜ், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார்!
* தான் வகித்த தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில் பலருக்கும் போக வேண்டும் என்று நினைத்தார். ''தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது. எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது'' என்றார்!
'* ஓர் இரவு' திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (அதாவது 360 பக்கங்கள்) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்!
* எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார். ''முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால், ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில் வருகிறேன்'' என்பார்!
* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ்!
* போப்பாண்டவரைச் சந்தித்த அண்ணா, கோவா விடுதலைக்குப் போராடி போர்ச்சுக்கல் சிறையில் இருக்கும் மோகன் ரானடேவை விடுதலை செய்யக் கேட்டார். விடுதலையான ரானடே, அண்ணாவுக்கு நன்றி சொல்ல சென்னை வந்தார். ஆனால், அண்ணா இறந்துபோயிருந்தார். இப்படி அண்ணாவின் வாழ்க்கை, தூரத்தில் இருப்பவர்களுக்காகப் பிரதிபலன் பார்க்காததாகவே இருந்தது!

No comments:

Post a Comment