.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday 17 September 2016

எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி 

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் கோபுரத்தில் இருந்து, 'மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா' என்ற ராஜாஜியின் பாடல், மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் குரல் வாயிலாக ராக மாலிகையாக, தென்றல் காற்று, இசையை அழைத்து வர, வலதுபுறம் திரும்பினால், பெரியாழ்வார் 'பல்லாண்டு' பாடிய 'மெய்காட்டிட்ட பொட்டல்'. இப்பகுதியில் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் ஒரு இசைக் கோயில் உள்ளது. 

அது, உலகம் முழுதும் இசையால் புகழ்பெற்ற சுப்புலட்சுமியின் இல்லம். இன்றும், வீட்டின் மேல்முகப்பில் வீணை வடிவம் உள்ளதை காணலாம்.ஒரு இசைக்கலைஞரால் சில பாடல்கள் புகழ்பெறலாம். ஆனால், பல திருக்கோயில்களும், பல சபாக்களும் பல விருதுகளும் புகழ்பெற்றன என்றால் அது, 'எம்.எஸ்.,' என்ற இரண்டெழுத்தினால் தான்.

'கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா' எனத் தொடங்கும் 'வேங்கடேச சுப்ரபாதம்' முதன்முதலாக பாடப்பட்டு, திருப்பதி திருக்கோயில் புகழ் அடைந்ததில் 'எம்.எஸ்.,'-க்கு பெரும் பங்கு உண்டு. அதனால் தான் திருப்பதி பேருந்து நிலையத்தில், தம்புராவுடன் கூடிய எம்.எஸ்.-, சிலை அமைக்கப்பட்டுள்ளது. அன்னமாச்சார்யாவின், 'ஷிராப்தி கன்யகு' என்ற குறிஞ்சி ராகக் கீர்த்தனையும், 'மறலி மறலி ஜெயமங்களமு' என்ற ராகமாலிகையும் உயிர் பெற்றது, எம்.எஸ்.,சின் குரல் வளத்தால் தான்.

மகாலட்சுமி தங்கும் வீடு தமிழகத்தில் உள்ள கர்நாடக சங்கீத வித்வான்களுக்கே சவாலான பல பாடல்கள், எளிய மக்களுக்கு சென்றடைந்தது எம்.எஸ்.,சின் இசை வழியே தான்.அவற்றில் சில:- ஆதி சங்கரர் பாடல்கள்

''ப்ருகிமுகுந்தேஹி -
பஜகோவிந்தம் - ராக மாலிகை
கனகதாரா ஸ்தோத்திரம் - ராகமாலிகை”
முத்துசாமி தீட்சிதரின் ஸ்ரீ வரலஷ்மி (ஸ்ரீராகம்) மற்றும் மகாலஷ்மி கருணா ரஸ (மாதவமனோகரி ராகம்) என்ற இரு க்ருதிகளும் நம் இல்லங்களில் ஒலித்தால் மகாலட்சுமி நம் வீட்டிலேயே இசை வடிவில் தங்கி விடுவாள்.

மேலும் இளங்கோவடிகளின் 'வடவரையை மத்தாக்கி' சிலப்பதிகாரப் பாடலும், 'கைத்தல நிறை கனி' - திருப்புகழும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 'வண்டாடும் சோலை' பாடலும் 'காற்றினிலே வரும் கீதம்' பாடலும் தமிழகத்தின் இசை மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. அதோடு 
அண்ணாமலை ரெட்டியாரின் 'மஞ்சு நிகர் குந்தல மிக' காவடிச் சிந்து கடல் கடந்து தமிழிசை மணம் பரப்பியது.

பாரதியாரின், 'நெஞ்சுக்கு நீதியும்', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா' படைப்புக்கள் 
கேட்போரின் மனதில் இசைவழியே உறுதியை, தேசபக்தியை விதைத்தன. அம்புஜம் கிருஷ்ணாவின் 'வருக வருகவே' தமிழிசைப் பாடல், இசை அரங்கில் வரவேற்பை பெற்றதும் 
எம்.எஸ்.,சின் இசை வளத்தால் தான்.

திரைப்படத்தில் எம்.எஸ்., சுதந்திர வேள்வியில், பலவித போராட்டங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கதர் இயக்கம் முதன்மை வகித்தது. அதில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் ஆவேசமிக்க சுதந்திர கீதங்களை இசைத்தவாறே கதர் விற்கும் பணியை புரிந்துள்ளார் சதாசிவம். அதன் மூலமாக ராஜாஜி அவர்களின் நட்பு கிடைத்தது. 

இசையை வேள்வியாகவே நினைத்து பாடி வரும் எம்.எஸ்.சுப்புலட்சுமியை கொண்டு, அன்னை கஸ்துாரிபா நினைவு நிதிக் கச்சேரிகள் செய்யுமாறு, ராஜாஜி கேட்டுக் கொண்டதன் பேரில், மகாத்மா காந்தியே சதாசிவம் தம்பதியருக்கு இந்த உன்னதப் பணி தொடர தன் மனமார்ந்த ஒப்புதலையும், ஆசிகளையும் வழங்கினார். எம்.எஸ்., குரல் வழியே “மன்னும் இமயமலை எங்கள் மலையே....” “பாரததேசம் என்று பெயர் சொல்லுவார்...” “வைஷ்ணவ ஜனதோ,” “ரகுபதி ராகவ ராஜாராம்...” போன்ற தேசபக்தியைப் போற்றும் பாடல்கள், இன்னும் பல்லாண்டுகள் அவரது தேசாபிமானத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

கானக்குயில் 

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டிற்கு யாராவது விமர்சனம் எழுத முயற்சித்தால், அமரர் கல்கியின் விமர்சனத்தினை நினைவுபடுத்திக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அமரர் கல்கி எழுதினார், 

'சுப்புலஷ்மியின் ராக ஆலாபனை கானக் குயில்களின் ஆரவாரம்; மழைத்துளிகள் தந்த 
சந்தோஷம். கலாபமயிலின் களி நடனம், அருவியின் கம்பீர ஓசை, அலைகளின் ஆர்ப்பரிப்பு, பசியாறிய ஏழையின் முகத்தில் ஏற்பட்ட நிறைவு அனைத்தையும் நினைவுபடுத்தியது' என்று பற்பல உவமைகளால் அந்த இன்ப உணர்வை விளக்க முயற்சித்தார்.

அந்த இசையரசிக்கே உரிய பாணி, பாடாந்திரம், எந்த கீர்த்தனையை எந்த காலப்ரமாணத்தில் பாட வேண்டும், எந்த வரிக்கு எப்படிப்பட்ட சங்கதிகள் சோபை தரும், தன் குரலின் அழகை எங்கு வெளிப்படுத்தலாம், வல்லின, மெல்லின ஏற்ற இறக்கங்கள், எப்படி வார்த்தைகளைப் பிரித்தால் சாஹித்ய பாவம் கெடாமல் பாடலாம். 

எங்கு நிறுத்தி எங்கு மூச்சுப்பிடித்துப் பாடினால் சிரமம் இன்றிப்பாடலாம், எந்த இடத்தில் குரலின் வளமையினை, நாபியில் இருந்து வெளிப்படும் நாதத்தின் மகிமையைக் காட்டலாம், எந்த ராகத்தைச் சுருக்கமாக, விரிவாகப் பாடினால் கச்சேரி சோபிக்கும்.எப்படி பக்கவாத்தி
யங்களை அனுசரணையாகவும், சுறுசுறுப்பாகவும் மாற்றி கச்சேரியை நடத்திச் செல்லலாம், வந்தது வராமல் ஸ்வர மழை எப்படிப் பொழியலாம் என்று எம்.எஸ்.,ஐ வைத்து, ஒரு விளக்க உரை எழுத வைத்தால், அது 'என்சைக்ளோபீடியா' பக்கங்களை மிஞ்சும் என்று எதிர்பார்க்கலாம்.

விருதுகள் 

இசை உலகில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அறுபதாண்டு கால சாதனைகளைப் பாராட்டி, 
பாரதத்தின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டுள்ளது (1998). இந்த விருதினைப் பெறும் முதல் இசைக் கலைஞர் எம்.எஸ்., என்பது நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய 
செய்தி. பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குபவர்களுக்கான, ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்ட 1954-ம் ஆண்டிலேயே, இசைத் துறையின் தலைசிறந்த கலைஞர் என்கிற 
அடிப்படையில் 'பத்ம பூஷன்' விருதினை முதல் ஆண்டிலேயே பெற்றவர் எம்.எஸ்.

இவரது 'மீராபஜன்' பாடல்களில், தன்னையே மறந்து உள்ளம் உருகியவர் அண்ணல் காந்தி. ''நானொரு சாதாரண பிரதம மந்திரி, இவரோ இசை உலகின் பேரரசி! பேரரசியின் முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்?” என்று நேருவால் புகழாரம் சூட்டப்பட்டவர். இவரின் இசையில் மனதைப் பறிகொடுத்த சரோஜினி நாயுடு, தனது 'இசைக்குயில்' பட்டத்தை எம்.எஸ்.,க்கு தாரை வார்த்துத் தந்தார்.

1966-ல் ஐ.நா., பொதுச் சபையில் பாடி உலகப் புகழ் அடைந்தார். இங்கிலாந்தில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், சோவியத் ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, நமது இசைக் கொடியை உலகத்தின் பார்வைக்கு உயர்த்திப் பிடித்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

ஆசியாவின் பெருமைக்குரிய முதல் நிலை விருதான 'ரேமான் மகசேசே விருது', 'இந்திராகாந்தி விருது' உள்ளிட்ட ஏராளமான விருதுகள் எம்.எஸ்.சுப்புலட்சுமியை தேடி வந்தடைந்து
தங்களை பெருமைப்படுத்திக் கொண்டன.

No comments:

Post a Comment