- அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்
- நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும்.அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்ததாவது:
- அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.
- அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.
- இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.
- அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.
- அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.
- தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.
Sunday, 28 August 2016
அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment