.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Thursday, 25 August 2016

ம.பொ.சி.யை மறந்த சென்னை


  • சென்னை நகரம் 22.8.1639ஆம் ஆண்டு உருவான நாளை "சென்னை தினம்" எனும் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  •  பல்வேறு செய்தி ஊடகங்களில் சென்னை குறித்து வரலாற்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சென்னையை மீட்க தமிழர்கள் ஆந்திரர்களோடு நடத்திய போராட்டம் குறித்தும் விடாப்பிடியாகப் போராடி தமிழகத்திற்கு சென்னையை மீட்டுத் தந்த ம.பொ.சிவஞானம் குறித்தும் எந்தப்பதிவும் இல்லை. தமிழரல்லாதவர்கள் ஊடகத்துறையில் செல்வாக்கு செலுத்துவதால் சென்னை மீட்பு போராட்டம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
  • சென்னை மீட்பு வரலாற்றை இனி சுருக்கமாக காண்போம். சென்னை நகரம் தொன்று தொட்டு தமிழர்களின் பூமியாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆண்ட தொண்டை மண்டலப்பகுதியில் கட்டுப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தொடர்ந்து படையெடுத்து வந்த தமிழரல்லாதவர்கள்  கையில் சென்னை நகரம் இருந்த போதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்துள்ளனர்.
  • 1912ஆம் ஆண்டில் ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து மொழிவழி மாகாணம் கேட்டுப் போராடி வந்தனர். அப்போது ஆந்திரர்கள் சென்னையில் சிறுபான்மையினராக வாழ்ந்த போதிலும் சென்னை நகரை தனக்கு சொந்தமாக்க விரும்ப வில்லை. 1920ஆம் ஆண்டில் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதில் ஆந்திரர்கள் தான் முதலமைச்சராக வந்தனர். 1920 முதல் 1947 வரை பதவிக்கு வந்த அறுவரில் ஐவர் ஆந்திரர். ஒருவர் தமிழர். இதன் காரணமாக சென்னை நகரம் ஆந்திரர்களுக்கு சொந்தம் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.
  • இந்திய விடுதலைக்கு (1947) முன்னர் டாக்டர். இராசேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணய மன்றம் அமைக்கப்பட்ட போது அதன் ஆலோசகராக சர்.பி.என். இராவ் என்பவர் இருந்தார். அவர் தமிழினத்திற்கு எதிரான ஒரு திட்டத்தை முன் வைத்தார். அத்திட்டத்தின் படி சென்னை மாகாணத்தை பிரிக்காமல் நிர்வாக வசதி என்ற பெயரில் இரண்டாகப் பிரிப்பது என்றும், அதன்படி வட சென்னை துணைமாகாணம், தென் சென்னை துணை மாகாணம் என்று இரண்டாக செயல்படுவது என்றும், இரு துணை மாகாணங்களுக்கும் சென்னை பொது தலைநகராக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தை தெலுங்குத் தலைவர்களான டாக்டர். இராதா கிருஷ்ணன், வி.வி.கிரி, தங்குத்தூரி பிரகாசம் பந்துலு ஆகியோர் ஆதரித்தனர். ஆந்திர மகாசபையும் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. சர்.பி.என்.ராவ் திட்டத்தின்படி சென்னை மாகாணம் இரண்டு துணை மாகாணமாகப் பிரிந்திருந்தால் ஆந்திரருக்கு சென்னையுடன் கூடிய மொழிவழி ஆந்திர மாகாணம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழருக்கோ சென்னையை ஆந்திரருக்கு பறிகொடுத்ததோடு, தமிழகம், மலபார் மாவட்டம், தென்கன்னட மாவட்டங்கள் இணைந்த மூன்று மொழி பேசும் கலப்புத் துணை மாகாணம் அமைந்திருக்கும். நல்லவேளையாக அன்றைக்கு ம.பொ.சிவஞானம் தமிழர்கள் சார்பில் நின்று குரல் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து சென்னையைத் துண்டாடும் நாள் சென்னையில் இரத்த ஆறு ஓடும் நாளாகத்தான் இருக்க முடியும். தங்கள் தலைகளைக் கொடுத்தேனும் தமிழ்நாட்டின் தலை நகரைக் காத்திட வேண்டும் என்று 'தமிழ்முரசு' ஏட்டில் (1.4.1947) முழங்கினார். அதன் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
  • 1952ஆம் ஆண்டில் மீண்டும் ஆந்திரர்கள் சென்னையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பொட்டிஸ்ரீராமுலு என்பவர் ஆந்திர மாநிலக் கோரிக்கையோடு 'மதராஸ் மனதே' என்று  சென்னை மைலாப்பூரில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார். அவரை நேரில் சந்தித்துப் பேசிய ம.பொ.சி. அவர்கள், "சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசு கழகம் ஆந்திரர்களுக்கு துணை நிற்கும்" என்று பதிலுரைத்தார்.
  • 16.12.1952இல் பொட்டி ஸ்ரீராமுலு 58வது நாளில் உயிர் துறந்த போது ஆந்திரத்தில் போராட்டம் வெடித்தது. சென்னையில் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆந்திரர்கள் வெறிகொண்டு தமிழர்களை தலைநகரிலே தாக்கினர். ஆந்திரர் போராட்டத்தை கண்டு அஞ்சிய பிரதமர் நேரு தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுமென்று அறிவித்தார். அப்போது தங்குதூரி பிரகாசம் பந்துலு என்பவர் ஆந்திரத்திற்கு தற்காலிக தலைநகராக சென்னை இருக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை ம.பொ.சி. கடுமையாக எதிர்த்தார். சென்னையை ஆந்திரருக்கு சொந்தமாக்கும் கோரிக்கையை நேரு ஏற்றுக் கொண்டால் உடனே பதவி விலகுவேன் என்றும் அன்றைய முதல்வர் இராசாசி அறிவித்தார். அதன் பிறகு நேரு சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லா தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாலட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்றும், ஆந்திரத் தலைநகர் பற்றி பின்னால் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் கூறி ஆந்திரர்களின் கோரிக்கையை புறக்கணித்தார். 1956இல் மொழிவழி மாகாணம் உருவாக்கப்பட்டு சென்னைத் தமிழ் மாகாணத்திற்கு சென்னை தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது.
  • சென்னை மீட்புப் போராட்டத்தில்     திராவிடர் இயக்கத்தினர் எவரும் பங்களிக்க மறுத்தே வந்தனர். மொழிவழித் தேசிய உணர்ச்சி திராவிட இயக்கத்தினர் எவருக்கும் இல்லையென்பது தான் கசப்பான உண்மையாகும்.
சென்னையை மீட்டுக் கொடுத்த ம.பொ.சிக்கு சென்னை நகரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் சிலை நிறுவப்பட்டது. ம.பொ.சி.யை மறந்து விட்டு "சென்னை தினம்" கொண்டாடுவது தலையில்லாத முண்டத்தை கொண்டாடுவதற்கு ஒப்பாகும். வரும் ஆண்டிலாவது  சென்னையை மீட்டுத் தந்த அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.  தமிழ்த்தேசிய அமைப்புகளும் சென்னை மீட்பு வரலாற்றை இந்நாளில் தமிழர்களிடம் கொண்டு சேர்க்குமாறு வேண்டுகிறோம்!

1 comment: