.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Saturday, 17 September 2016

பகை வரும்முன் முடிக்க காத்திருக்கும் இந்திய ராணுவம்!

பகை வரும்முன் முடிக்க காத்திருக்கும் இந்திய ராணுவம்!

இந்திய சீனா எல்லையான லே-லடாக்கில் நம்முடைய ராணுவம் 100 T-72 டாங்கிகளை கொண்டு போய் சீனாவை நோக்கி வைத்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் சண்டை நடந்து 54 வருடங்கள் முடிய உள்ள நிலையில் இது வரை அங்கே டாங்கிகள் இல்லாமல் இருந்தது என்றால் நம் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து கொள்ளுங்கள்.

இதனால்தான் லடாக் பகுதியில் சீனா அடிக்கடி அத்து மீறி வருகின்றது. இதனைத் தடுக்கும் வகையில் லடாக் பகுதியில், சீன எல்லைக்கு சற்று தொலைவில் 100 அதிநவீன ராணுவ டாங்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன . இன்னும் சில ராணுவ டாங்குகள் அங்கு செல்ல உள்ளன. லடாக் போன்ற உயரமான மலைச்சிகரத்தில் டாங்குகளை கொண்டு செல்வது சிரமம். அதனால்தான் அங்கு இந்தியா பாதுகாப்புக்கு பெரிய அளவில் எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்து வந்தது. ஆனால் மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு அனைத்து தடைகளையும் தாண்டி லே-லடாக் பகுதிக்கு டாங்கிகளை அனுப்பியுள்ளது.

குளிர் காலத்தில் சுமார்  -50 டிகிரி வெப்பநிலை இருக்கும் இந்த லடாக்கில் மேற்கே பாகிஸ்தான் எல்லை பகுதியான கார்கிலும் கிழக்கே சீன எல்லையான 'லே'வும் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 17,500 அடிக்கும் மேல் உயரத்தில் இருக்கும் லடாக்கிற்கு செல்ல சரியான சாலைவசதிகள் இல்லாமல் இருந்தது மோடி அரசாங்கம் சாலைகள் போட்டு இப்பொழுது டாங்கிகளை கொண்டு சென்றுள்ளது.

மைனஸ் -50 டிகிரி செல்சியஸ் உறைபனியிலும் இந்த டாங்குகளை இயங்க செய்யும் வகையில் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக நவீன ரக இஞ்ஜின்களை  லடாக்கில் உள்ள டி.ஆர்.டி.ஓ வடிவமைத்துT-72 டாங்கியில் பொருத்தியுள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உள்ள நீளம் 3500கிலோ மீட்டர் தூரம் கொண்ட எல்லைபகுதியில் இங்கு தான் 1962  போரின் மூலம் இந்தியாவின் ஒன்று பட்ட காஸ்மீரில் இருந்து சீனா கைப்பற்றிய அக்சாய்சின் என்கிற 38,000 கிலோமீட்டர் பகுதி உள்ளது. காஸ்மீர் ராஜா ஹரி சிங் நமக்கு கொடுத்த இந்த இடத்தை சீனா அன்றைய இந்தியராணுவத்தின் திட்டமிடல் இல்லாததால் இழந்து விட்டது.

ஆனால் பவுத்தர்கள் என்று அதிகம் வசிக்கும் லடாக்கில் தொலை தொடர்பே மோடி ஆட்சி வந்த பிறகுதான் ஏற்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் 16000 அடி உயரத்தில் செல்போன் டவர் அமைத்து மைபைல் வசதி ஏற்படுத்தபட்டது. இதனால் நம்முடைய ராணுவ வீரர்களுக்கும் லடாக் மக்களுக்கும் இடையே தொலை
தொடர்பு உண்டானது.

இதோடு டி.ஆர்.டி.ஓவின்(Defence Research and Development Organization)ஆராய்ச்சி மையம் ஒன்று 2015 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் திறக்கக்கபட்டு  அங்கேயே டாங்கிகளை வடிவமைக்கும் வேலையும்  தொடங்கப்பட்டது. இதனால் 41.5 டன் எடையுள்ள இந்த ரஷ்ய தொழில் நுட்பத்தில் தயாரான T-72 டாங்கிகள் அங்குள்ள குளிர் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாற்றியமைக்கபட்டது.

இந்த லடாக் டி.ஆர்.டி.ஓ தான் உலகத்திலேயே அதிக உயரத்தில் உள்ள  பாதுகாப்பு ஆராய்ச்சி மையம். இங்கிருந்து சீனா ராணுவம் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேற்கொள்ளும்  தகவல் பறிமாற்றங்கள் இடைமறிக்கபட்டு கண்காணிக்கப்படுகிறது. இப்படி இந்திய ராணுவத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, எல்லையை பாதுகாக்க டாங்கிகளையும் துணைக்கு அனுப்பியுள்ள மோடி அரசுக்கு ஒரு சல்யூட்.


ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் கடற்கரையிலிருந்து 45 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடா கடலில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர் மூழ்கி கப்பலில் இருந்து, ஏப்ரல் 14 அன்று அணுகுண்டை தாங்கிச் செல்லும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ( கடலுக்கு அடியில் 20மீட்டர் ஆழத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.) 

இந்த  ஏவுகணைக்கு ரகசிய குறியீடாக  K - 4 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகள் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட அணுகுண்டை தாங்கி சென்று 3500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கும் திறன்  கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வசதி அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா  போன்ற ஒரு சில நாடுகளுக்கே உள்ளது.

வடக்கே தலை வைத்து ஏன் படுக்க கூடாது! ஆய்வின் அதிரடி

வடக்கே தலை வைத்து ஏன் படுக்க கூடாது! ஆய்வின் அதிரடி

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. 

ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது.
வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். 

அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது.

மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது.

மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. 

எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. 

ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது.

அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.
அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 

7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள்.

வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. 

ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார்.

அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். 

அது நல்லதல்ல. 

அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. 

அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது.

மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். 

கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள்.

அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது.

இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. 

கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள்.

வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு.

தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள்

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், 
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும், 
கோழியிடம் இருந்து நான்கையும், 
காக்கையிடம் இருந்து ஐந்தையும், 
நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, 
நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், 
வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், 
தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், 
தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், 
தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,
 யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,
 தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், 
உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், 
நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், 
தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இது நான்  சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!

காவிரியும் தமிழக விவசாயமும்:

காவிரியும் தமிழக விவசாயமும்:

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள குடகு நாட்டில் காவிரி உற்பத்தியாகிறது. குடகு பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி துளு. இம்மொழி தமிழிலிருந்து உருவானது. 

அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் தனி சமஸ்தானமாக இருந்து வந்த இப்பகுதி 1956ல் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையின் போது கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மலைகளும், காடுகளும் நிறைந்தது இப்பகுதி. காவிரி இங்குதான் உருவாகிறது சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் 450 கி.மீ தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது.

மேலும் கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில் கலக்கிறது. ஆக கர்நாடகம், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி சமவெளி மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் காவிரி விவசாயம் தொன்மை வாய்ந்தது. உலகிலுள்ள பெரிய நதிதீரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெறும் பழமை வாய்ந்த விவசாயங்களோடு ஒப்பிடத்தக்கதாகும். மேலும் தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதம் காவிரி சமவெளியில் இருக்கின்றது. கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பும், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பும் காவிரி சமவெளியில் இருக்கின்றன. 1971ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 28 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி காவிரி நீரினால் பயன்பெற்றது. அன்றைய சூழலில் கர்நாடகா 7 லட்சம் ஏக்கர் பரப்பில்தான் காவிரி தண்ணீரை பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழலில் காவிரியில் உற்பத்தியாகும் தண்ணீரின் ஆண்டு சராசரி அளவு 671 டி.எம்.சி. ஆக இருந்தது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த அரிசியில் பாதிக்கு மேல் காவிரி டெல்டா பாசனப்பகுதியின் மூலமாகத்தான் விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முதன்முதலாக கி.பி. 2ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் காவிரி மீது கட்டப்பட்ட முதல் அணை கல்லணையாகும். உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த அணையாக இது கருதப்படுவது சிறப்பாகும். காவிரி பிரச்சனை இன்று நேற்றல்ல… அன்றையa காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. ஆம் கி.பி. 11ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் மைசூர் அரசு காவிரியை தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த முனைந்தது. அப்போதெல்லாம் முதலில் இரண்டாம் இராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தடுத்ததும், அதன் பிறகு 17ம் நூற்றாண்டில் −ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.

அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும், 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதை தடுக்கும் எதிர்காலத்திட்டத்துடன்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள அணையும் கட்டப்பட்டது. இதன் விளைவாக உருவானவைதான் 1892, 1924ம் ஆண்டுக் காவிரி நீர் ஒப்பந்தங்கள்.தமிழக, கர்நாடக நீர்வளம்தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சராசரி 1300 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாகிறது. கர்நாடகா முழுவதும் 3300 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் இரண்டரை மடங்கு அதிகமாக தண்ணீர் உற்பத்தியாகிறது.

தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் காவிரி ஒன்றுதான் பெரியநதி. ஆனால், கர்நாடகாவில் காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம் கொண்ட கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. இந்நதி மூலம் மட்டுமே ஆண்டுக்கு 734 டி.எம்சி. தண்ணீர் (காவிரியில் உற்பத்தியாகும் நீரைவிட 63 டிஎம்சி அதிகம் கர்நாடகாவிற்கு கிடைக்கிறது) மேலும் இங்கு உற்பத்தியாகும் 2000 டிஎம்சி நீர் எதற்கும் பயன் இல்லாமல் நோக்கி ஓடி அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. இது மட்டுமன்று கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில்தான் கலக்கிறது. இந்த அளவு நீரைதான் தமிழகத்தில் மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி பரம்பரையாகவே காலங்காலமாக பயிர்செய்யப்படும் குறுவை சம்பா சாகுபடிக்கு தேவையான கர்நாடகம் விட வேண்டிய நீரின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரிச்சிக்கல்1924ல் உருவான ஒப்பந்தம் 1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநிலa நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடாகா.

இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது.இதன் பொருட்டு தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அப்போதைய பிரதமரின் தலையீட்டால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிறகு 1983ல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நடுவர் மன்றம் அமைக்கும்படி கேட்டது. அதன் பிறகு தமிழக அரசு 1986ல் மத்திய அரசிடம் நடுவர் மன்றம் அமைக்கும்படி விண்ணப்பித்தது. இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் திரு. வி.பி. சிங்கின் மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970 முதல் 1990 வரை தமிழக, கர்நாடக மந்திரிகள், முதல்வர்கள் போன்றோர் 21 முறை இப்பிரச்சனைக் குறித்து விவாதித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி நடுவர் மன்றமே கூட அன்றைய நிலையில் காங்கிரஸ் பாரதியஜனதா போன்ற பெரிய கட்சிகள் அன்றி வி.பி.சிங்கை பிரதமராகக் கொண்ட தேசிய முன்னணியின் முயற்சியால் தமிழக கோரிக்கையின்படி அமைக்கப்பட்டதாகும்.நடுவர் மன்றத்தீர்ப்பு 25/6/91 தேதியிட்ட இடைக்காலத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக தமிழகத்திலுள்ள மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு ஆண்டும் (ஜூன் மாதம் ஆரம்பித்து மே மாதத்தில் முடிவடையும்) 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அனுப்ப வேண்டும் என்றும் (ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 137 டி.எம்.சி. தண்ணீர் அனுப்ப வேண்டும்) கர்நாடகா தனது பாசன பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டு இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்த இடைக்காலத் தீர்ப்பே அமலில் இருந்திடும் என்றும் உத்தரவிட்டது. இதன்பிறகு 25.11.91ல் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல் முறையீடு செய்ததன் விளைவாக 3.4.92ல் நடுவர் மன்றம் விளக்கத் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இதில் போதிய அளவு தண்ணிர் உற்பத்தியாகாத ஆண்டுகளில் ஏற்படும் பற்றாக்குறையை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

கர்நாடகாவின் நயவஞ்சகம் இந்த விளக்கத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறை என்ற வார்த்தையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் கர்நாடகா குழப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும் பற்றாக்குறை என்று கூறி வந்துக்கொண்டிருக்கிறது.1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம் ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம் ஏக்கருக்கு மேலும் பாசனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இது மட்டுமல்லாது கர்நாடகா அணைகளுக்கு கீழே உள்ள கர்நாடக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகளை ஆழப்படுத்தி அணைகளில் நிரம்பி வழியும் நீரையும் அதில் தேக்கி வைப்பதன் மூலம் தமிழகத்திற்கு நீர் கிடைக்காமல் செய்ய முயல்கிறது. தமிழகத்தின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனை இன்று அரசியல் ஆக்கப்பட்டதுதான் வேதனை தரும் விஷயம். இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் இப்பிரச்சனை வெடிக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சமுறும் வகையில் நிகழ்வுகள் அங்கு அரங்கேறுகின்றன. காவிரி: தமிழகத்திற்கு நேரிட்ட அரசியல் சிக்கல்கள்நடுவர் மன்றம் அமைப்பதற்கு முன்புவரை, அதுகாலம்வரை மத்தியில் ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் அரசு ‘நடுவர்மன்றம்’ என்பதையே அமைக்கவே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1992ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணையில் 12/8/1998ல் உச்ச நீதி மன்றம் காவிரி நதிகள் ஆணையம் அமைக்க இறுதி வாய்ப்பு வழங்கிய நிலையில், உச்சநீதி மன்ற நெருக்கடியின் பேரில் அப்போதைய (1998) பாரதிய ஜனதா கூட்டணி அரசு உருவாக்கிய காவிரி ஆணையமோ, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முறையான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. இதன் மூலம் உச்சநீதிமன்ற வழக்கும் முடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கர்நாடகத்திற்கு சாதகமாகிவிட்டது. தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் (அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர தேர்தல் அரசியல் கட்சிகள்) இவ்விஷயத்தில் அதிகளவில் – டெல்டா விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினை தீர்த்து வைப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட இவர்களின் யார் மக்களின் காவலன் என்கிறவகையான அறிக்கை போர்களில்தான் அதிகம் அக்கறை காட்டுகின்றனர்.அதுமட்டுமல்லாது மாற்றுப் பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறி காவிரியில் பன்னெடுங்காலமாக நமக்கு உள்ள உரிமையை மறைமுகமாக நீர்த்து போகச்செய்கின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல, தேசிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதாவும் கர்நாடகத்தில் செல்வாக்குள்ள கட்சியாக விளங்குவதால் அவை கர்நாடகத்திற்கு எதிராக செயல்பட தயங்குகிறது. தேசியக்கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்களது தமிழ்நாடு பிரிவு தண்ணீர் கேட்டும், கர்நாடக பிரிவு தண்ணீர் தரக்கூடாது என்று கூறியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தற்போது கூட காவிரி நடுவர் மன்றத்தையே மாற்ற வேண்டும் என்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காவிரி நீரை மறுப்பதில் கன்னடர்களுக்கு உள்ள ஒற்றுமை அதை பெறுவதில் தமிழர்களுக்கும், தமிழக ஆட்சியளார்கள், அரசியல்யர்களுக்கு இல்லை. அதனாலேயே மத்திய அரசு இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. 

இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பாலைவனமாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது. இதை உணர்ந்து தமிழக மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைப்பாகி காவிரியை மீட்க, ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும். இந்த நெருக்கடியானது மத்தியரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துமேயானால் காவிரி தீர்விற்கு அதுவே அச்சாரமாக அமையும்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமி 

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் கோபுரத்தில் இருந்து, 'மணிவண்ணா, மலையப்பா, கோவிந்தா, கோவிந்தா' என்ற ராஜாஜியின் பாடல், மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியின் குரல் வாயிலாக ராக மாலிகையாக, தென்றல் காற்று, இசையை அழைத்து வர, வலதுபுறம் திரும்பினால், பெரியாழ்வார் 'பல்லாண்டு' பாடிய 'மெய்காட்டிட்ட பொட்டல்'. இப்பகுதியில் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் ஒரு இசைக் கோயில் உள்ளது. 

அது, உலகம் முழுதும் இசையால் புகழ்பெற்ற சுப்புலட்சுமியின் இல்லம். இன்றும், வீட்டின் மேல்முகப்பில் வீணை வடிவம் உள்ளதை காணலாம்.ஒரு இசைக்கலைஞரால் சில பாடல்கள் புகழ்பெறலாம். ஆனால், பல திருக்கோயில்களும், பல சபாக்களும் பல விருதுகளும் புகழ்பெற்றன என்றால் அது, 'எம்.எஸ்.,' என்ற இரண்டெழுத்தினால் தான்.

'கவுசல்யா சுப்ரஜா ராம பூர்வா' எனத் தொடங்கும் 'வேங்கடேச சுப்ரபாதம்' முதன்முதலாக பாடப்பட்டு, திருப்பதி திருக்கோயில் புகழ் அடைந்ததில் 'எம்.எஸ்.,'-க்கு பெரும் பங்கு உண்டு. அதனால் தான் திருப்பதி பேருந்து நிலையத்தில், தம்புராவுடன் கூடிய எம்.எஸ்.-, சிலை அமைக்கப்பட்டுள்ளது. அன்னமாச்சார்யாவின், 'ஷிராப்தி கன்யகு' என்ற குறிஞ்சி ராகக் கீர்த்தனையும், 'மறலி மறலி ஜெயமங்களமு' என்ற ராகமாலிகையும் உயிர் பெற்றது, எம்.எஸ்.,சின் குரல் வளத்தால் தான்.

மகாலட்சுமி தங்கும் வீடு தமிழகத்தில் உள்ள கர்நாடக சங்கீத வித்வான்களுக்கே சவாலான பல பாடல்கள், எளிய மக்களுக்கு சென்றடைந்தது எம்.எஸ்.,சின் இசை வழியே தான்.அவற்றில் சில:- ஆதி சங்கரர் பாடல்கள்

''ப்ருகிமுகுந்தேஹி -
பஜகோவிந்தம் - ராக மாலிகை
கனகதாரா ஸ்தோத்திரம் - ராகமாலிகை”
முத்துசாமி தீட்சிதரின் ஸ்ரீ வரலஷ்மி (ஸ்ரீராகம்) மற்றும் மகாலஷ்மி கருணா ரஸ (மாதவமனோகரி ராகம்) என்ற இரு க்ருதிகளும் நம் இல்லங்களில் ஒலித்தால் மகாலட்சுமி நம் வீட்டிலேயே இசை வடிவில் தங்கி விடுவாள்.

மேலும் இளங்கோவடிகளின் 'வடவரையை மத்தாக்கி' சிலப்பதிகாரப் பாடலும், 'கைத்தல நிறை கனி' - திருப்புகழும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 'வண்டாடும் சோலை' பாடலும் 'காற்றினிலே வரும் கீதம்' பாடலும் தமிழகத்தின் இசை மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. அதோடு 
அண்ணாமலை ரெட்டியாரின் 'மஞ்சு நிகர் குந்தல மிக' காவடிச் சிந்து கடல் கடந்து தமிழிசை மணம் பரப்பியது.

பாரதியாரின், 'நெஞ்சுக்கு நீதியும்', 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா' படைப்புக்கள் 
கேட்போரின் மனதில் இசைவழியே உறுதியை, தேசபக்தியை விதைத்தன. அம்புஜம் கிருஷ்ணாவின் 'வருக வருகவே' தமிழிசைப் பாடல், இசை அரங்கில் வரவேற்பை பெற்றதும் 
எம்.எஸ்.,சின் இசை வளத்தால் தான்.

திரைப்படத்தில் எம்.எஸ்., சுதந்திர வேள்வியில், பலவித போராட்டங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கதர் இயக்கம் முதன்மை வகித்தது. அதில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் ஆவேசமிக்க சுதந்திர கீதங்களை இசைத்தவாறே கதர் விற்கும் பணியை புரிந்துள்ளார் சதாசிவம். அதன் மூலமாக ராஜாஜி அவர்களின் நட்பு கிடைத்தது. 

இசையை வேள்வியாகவே நினைத்து பாடி வரும் எம்.எஸ்.சுப்புலட்சுமியை கொண்டு, அன்னை கஸ்துாரிபா நினைவு நிதிக் கச்சேரிகள் செய்யுமாறு, ராஜாஜி கேட்டுக் கொண்டதன் பேரில், மகாத்மா காந்தியே சதாசிவம் தம்பதியருக்கு இந்த உன்னதப் பணி தொடர தன் மனமார்ந்த ஒப்புதலையும், ஆசிகளையும் வழங்கினார். எம்.எஸ்., குரல் வழியே “மன்னும் இமயமலை எங்கள் மலையே....” “பாரததேசம் என்று பெயர் சொல்லுவார்...” “வைஷ்ணவ ஜனதோ,” “ரகுபதி ராகவ ராஜாராம்...” போன்ற தேசபக்தியைப் போற்றும் பாடல்கள், இன்னும் பல்லாண்டுகள் அவரது தேசாபிமானத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

கானக்குயில் 

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டிற்கு யாராவது விமர்சனம் எழுத முயற்சித்தால், அமரர் கல்கியின் விமர்சனத்தினை நினைவுபடுத்திக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அமரர் கல்கி எழுதினார், 

'சுப்புலஷ்மியின் ராக ஆலாபனை கானக் குயில்களின் ஆரவாரம்; மழைத்துளிகள் தந்த 
சந்தோஷம். கலாபமயிலின் களி நடனம், அருவியின் கம்பீர ஓசை, அலைகளின் ஆர்ப்பரிப்பு, பசியாறிய ஏழையின் முகத்தில் ஏற்பட்ட நிறைவு அனைத்தையும் நினைவுபடுத்தியது' என்று பற்பல உவமைகளால் அந்த இன்ப உணர்வை விளக்க முயற்சித்தார்.

அந்த இசையரசிக்கே உரிய பாணி, பாடாந்திரம், எந்த கீர்த்தனையை எந்த காலப்ரமாணத்தில் பாட வேண்டும், எந்த வரிக்கு எப்படிப்பட்ட சங்கதிகள் சோபை தரும், தன் குரலின் அழகை எங்கு வெளிப்படுத்தலாம், வல்லின, மெல்லின ஏற்ற இறக்கங்கள், எப்படி வார்த்தைகளைப் பிரித்தால் சாஹித்ய பாவம் கெடாமல் பாடலாம். 

எங்கு நிறுத்தி எங்கு மூச்சுப்பிடித்துப் பாடினால் சிரமம் இன்றிப்பாடலாம், எந்த இடத்தில் குரலின் வளமையினை, நாபியில் இருந்து வெளிப்படும் நாதத்தின் மகிமையைக் காட்டலாம், எந்த ராகத்தைச் சுருக்கமாக, விரிவாகப் பாடினால் கச்சேரி சோபிக்கும்.எப்படி பக்கவாத்தி
யங்களை அனுசரணையாகவும், சுறுசுறுப்பாகவும் மாற்றி கச்சேரியை நடத்திச் செல்லலாம், வந்தது வராமல் ஸ்வர மழை எப்படிப் பொழியலாம் என்று எம்.எஸ்.,ஐ வைத்து, ஒரு விளக்க உரை எழுத வைத்தால், அது 'என்சைக்ளோபீடியா' பக்கங்களை மிஞ்சும் என்று எதிர்பார்க்கலாம்.

விருதுகள் 

இசை உலகில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அறுபதாண்டு கால சாதனைகளைப் பாராட்டி, 
பாரதத்தின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டுள்ளது (1998). இந்த விருதினைப் பெறும் முதல் இசைக் கலைஞர் எம்.எஸ்., என்பது நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய 
செய்தி. பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குபவர்களுக்கான, ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்ட 1954-ம் ஆண்டிலேயே, இசைத் துறையின் தலைசிறந்த கலைஞர் என்கிற 
அடிப்படையில் 'பத்ம பூஷன்' விருதினை முதல் ஆண்டிலேயே பெற்றவர் எம்.எஸ்.

இவரது 'மீராபஜன்' பாடல்களில், தன்னையே மறந்து உள்ளம் உருகியவர் அண்ணல் காந்தி. ''நானொரு சாதாரண பிரதம மந்திரி, இவரோ இசை உலகின் பேரரசி! பேரரசியின் முன் பிரதம மந்திரி எம்மாத்திரம்?” என்று நேருவால் புகழாரம் சூட்டப்பட்டவர். இவரின் இசையில் மனதைப் பறிகொடுத்த சரோஜினி நாயுடு, தனது 'இசைக்குயில்' பட்டத்தை எம்.எஸ்.,க்கு தாரை வார்த்துத் தந்தார்.

1966-ல் ஐ.நா., பொதுச் சபையில் பாடி உலகப் புகழ் அடைந்தார். இங்கிலாந்தில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், சோவியத் ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, நமது இசைக் கொடியை உலகத்தின் பார்வைக்கு உயர்த்திப் பிடித்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

ஆசியாவின் பெருமைக்குரிய முதல் நிலை விருதான 'ரேமான் மகசேசே விருது', 'இந்திராகாந்தி விருது' உள்ளிட்ட ஏராளமான விருதுகள் எம்.எஸ்.சுப்புலட்சுமியை தேடி வந்தடைந்து
தங்களை பெருமைப்படுத்திக் கொண்டன.

அதிசயம்: ஆலமரம்

அதிசயம்: ஆலமரம்

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

அலெக்ஸண்டரை வியப்பில் ஆழ்த்திய மரம்

உபநிஷத ரிஷிகள், மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி கொடுக்க பயன்படுத்திய மரம்

இந்தியாவின் தேசிய மரம்

தமிழ், சம்ஸ்கிருத கவிஞர்கள் பாடிய மரம்

சால்மான் ருஷ்டி, சதே, டேனியல் டீபோ கதைகளில் வரும் மரம்

அங்கோர் வட் கோவிலுக்கு பெயர் கொடுத்த மரம்

பனியா என்ற சொல்லை ஆங்கில அகராதியில் நுழைத்த மரம்

பகவத் கீதையில் கண்ணன் சொன்ன மரம்

சிவன் உபதேசம் செய்த மரம்

கண்ணன் இலையில் மிதந்த மரம்

கின்னஸ் நூலில் புகழ் அடைந்த மரம்

அமெரிக்கா வரை சென்ற மரம்

வட சாவித்திரி விரதத்தில் வணங்கப்படும் மரம்

தமிழ் பழமொழிகளில் இடம்பெற்ற மரம்

தமிழ் நாட்டுக் கோவில்கள் ஆறில் தல விருட்சம் ஆன மரம்



உலகம் புகழும் இந்த இந்திய அதிசயம் உபநிஷத ரிஷிகள காலம் முதல் இன்று திரைப் படப் பாடல்கள் வரை மனிதனின் சிந்த்னையைத் தூண்டி வருகிறது. ஆல் போல் தழைத்து அருகு போல வேரூன்ற வேண்டும் என்று பெரியோர்கள் வாழ்த்துவதைக் கேட்கிறோம்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று ஆலமரமும் வேல மரமும் புகழப்படுகின்றன. (நாலும் இரண்டும்=வெண்பா, குறள் பாக்கள் வகை).

தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் பல ஊர்ப்பெயர்களிலும் (வடோதரா, குஜராத்) ஆல மரம் மணம் கமழும். தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் இது ஸ்தல விருட்சம் (மரம்) ஆக திகழ்கிறது. ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், திரு வில்லிப் புத்தூர்.

அங்கோர்வட் என்னும் கம்போடிய நாட்டு ஆலயம் உலக அதிசயங்களில் ஒன்று. அதன் பெயரில் உள்ள வட் என்பது “வட” என்ற சம்ஸ்கிருத சொல்லின் சுருக்கம் ஆகும். “வட” என்றால் ஆல மரம் என்பது பொருள்.

ஆண்டுதோறும் கோடைகால (ஆடி) பவுர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது.

பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு சர்மன் இந்த மரத்தை வானளாவப் புகழ்கிறான். மற்ற மரங்கள் பூமிக்குப் பாரமே என்பான். பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் வாழ்வளிக்கும், மனிதர்களுக்கு நிழல் அளிக்கும் இந்த மரம் மகிழ்ச்சிக் கடலின் இருப்பிடம் என்பான்.

எப்படி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல கட்டிடங்களுக்கு அடியில் வேரை நுழைத்து ஆலமரம் அந்தக் கட்டிடங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணவைக்கிறதோ அது போல மன்னன் அஜன் மனதில் கவலைகள் நுழைந்தன என்று கவிபாடுவான் உலகப் புகழ் காளிதாசன்.

ஆலின் கீழ் அமர்ந்து பேசா மூர்த்தியாக சிவ பெருமான், தட்சிணாமுர்த்தி வடிவில், மவுன உபதேசம் செய்த மரம். கண்ணன் ஆலின் இலையில் மிதந்து பெருமை ஏற்றிய மரமும் இதுதான். 

ஆதிகாலத்தில் கோவில்கள் அனைத்தும் மரத்தின் கீழ்தான் இருந்தன. குறிப்பாக ஆலமரத்தின் கீழ் கோவில் கட்டினர். ஊர் மன்றம் நடத்தினர். விழாக்கள் நடத்தினர்.

அலெக்ஸாண்டர் இந்த மரத்தைக் கண்டு வியந்ததையும் 7000 படை வீரர்களுடன் முகாம் இட்டதையும் கிரேக்க நாட்டு ஆசிரியர்கள நமக்கு எழுதிவைத்திருக்கிறார்கள்.

சாந்தோக்கிய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்ற இளைஞனுக்கு அவன் தந்தை பல விஞ்ஞான சோதனைகள் மூலம் இறை ஞானம் அளிக்கிறார். அதில் ஒரு செய்முறைப் பயிற்சி ஆல மரம் தொடர்புடையது.

“ மகனே அதோ அந்த ஆல மரத்திலிருந்து ஒரு பழம் பறித்து வா.

“இதோ, கொண்டுவந்துவிட்டேன், தந்தையே

“மகனே அதைப் பிரித்து உள்ளே பார்,

தந்தையே, மிக மிகச் சிறிய விதைகள் இருக்கின்றன

மகனே அதில் ஒருவிதையை எடுத்து பிரித்துப் பார்.

தந்தையே, பிரித்துவிட்டேன்.ஒன்றுமே தெரியவில்லையே.

பார்த்தாயா, ஒன்றுமே கண்ணுக்குக் தெரியாத அந்த ஒன்றிலிருந்துதான் இந்த பிரம்மாண்டமான ஆலமரம் உருவாகி இருக்கிறது. அதுதான் பிரம்மம். அது வேறு யாரும் இல்லை. நீயேதான்.(உன்னையே நீ அறிவாய்).

ஆலமரக்குச்சிகள் பல் தேய்க்க உதவும். அதன் பட்டைகளும், பாலும் பழமும் மருதுவப் பயன் கொண்டவை.

அஸ்வத்தாமவுக்கு பாண்டவர்களைப் படுகொலை செய்யும் யோசனை தோன்றியதும் ஆல மரத்துகடியில்தான். இரவு நேரத்தில் காகங்கள் ஆந்தைகளைத் தாக்கியதைப் பார்த்தவுடன் அதே போல இரவு நேரத்தில் பாண்டவர்கள் முகாமுக்குள் சென்று படுகொலைகள் செய்கிறான்.

அதே ஆலமரத்தை மும்மூர்த்திகளின் வடிவாக இந்துக்கள் வணங்குவர். பிரம்ம, விஷ்ணு, சிவன் அந்த மரத்தின் வேர், பட்டை, கிளைகளில் இருப்பதாக ஐதீகம்.

பனியா என்ற சொல்லும், பானியன் ட்ரீ என்ற சொல்லும் ஆங்கில அகராதியில் உண்டு. அந்தக் காலத்தில் வியாபாரிகள் (பனியாக்கள்) இம்மரத்தின் கீழ் இருந்து வணிகம் செய்ததை வைத்து மரத்துக்கு பானியன் ட்ரீBanyan Tree என்ற ஆங்கிலப் பெயர் வந்தது.

தாவர இயல் ரீதியில் அரச மரம் (அஸ்வத்த), அத்தி மரம், ஆல மரம், உடும்பரா ஆகியன மோரேஸி Moraceae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தன. இவை அனைத்தும் பைகஸ் Ficus என்னும் பெயருடன் துவங்கும். இந்துக்கள் இதை அந்தக் காலத்திலேயெ அறிவர். இவை அனைத்திலும் இறைவன் உறைவதை அறிந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட ஏற்றிவிட்டனர்.

(ந்யக்ரோத=ஆலமரம், அஸ்வத்த=அரச மரம், உடும்பர= அத்தி வகை, யமனுக்குரிய மரம், எமனின் மற்றொரு பெயர் அவுதும்பரன்)

உலகப் புகழ்பெற்ற ஆல மரங்கள்

வெளிநாட்டினர் இந்தமரங்களை அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய இடங்களில் நட்டு அவை மிகவும் பெரிதாக வளர்ந்துவிட்டன. அமெரிக்காவில் ஹவாய் திவிலும், ப்ளோரிடா மநிலத்திலும் ஆல மரங்கள் உண்டு.

ஆயினும் சென்னை அடையாறு பிரம்ம ஞான சபை வளாக ஆலமரம், ஆந்திர கதிரி திம்மம்மா ஆல மரம், உலகப் புகழ் கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள மாபெரும் ஆலமரம், பெங்களுருக்கு அருகிலுள்ள மரம், குஜராத்தில் இருக்கும் கபீர் வட், அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பஞ்சாப் பதேகார் மாவட்ட ஆல மரம்– நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. 

ஆயிரக் கணக்கான விழுதுகளுடன் இன்னும் வளருகின்றன. ஒரே நேரத்தில் 3000 முதல் 10000 பேர் வரை இவைகளின் கீழ் நிழலில் தங்கி இளைப்பாறலாம். இந்த மரங்களை அழியாமல் காப்பதும் போற்றி வளர்ப்பதும் நம் கடமை.

பஞ்சாபில் கட்டி சோலன் கிராமத்தில் இருக்கும் மாபெரும் ஆலமரத்தின் குச்சிகளை அடுப்பெரிக்க விறகுக்காக கூட மக்கள் எடுக்கமாட்டார்கள். அதனால் குடும்பத்துக்கே ஆபத்துவரும் என்று பயப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான பறவைகளை  ஆனந்தப் படுத்துமால மரத்தை துன்புறுத்த யாருக்கு மனம் வரும்?

“தெள்ளிய ஆலின் சிறுபழத் தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னக் கிருக்க நிழலாகும்மே” –(வெற்றிவேர்க்கை)

பொருள்: 

சிறிய மீனின் முட்டையை விடச் சிறியதான ஆல மர விதையானது நாற்பெரும் படையொடு வரும் மன்னரும் தங்க நிழல் தரும். அதுபோல மிகச் சிறிய செல்வமுடைய மேன் மக்கள் பிறருக்குப் பெரிதும் பயன்பட வாழ்வார்கள்..

அத்தி, ஆல் அரசு ஆகிய மரங்கள் எல்லாவற்றிலும் பூக்கள் வெளியே தெரியாமலே காய்கள் உருவாவதால் பூவாது காக்கும் மரங்கள் (கோளி ஆலம்) என்று சொல்லி இவைகளையும் உவமைக்குப் பயன்படுத்தினர் தமிழ் புலவர்கள்.

நாலடியார் என்னும் அற நூல் பல இடங்களில் ஆல மர உதாரணத்தைக் காட்டுகிறது. ஆலம் விதை சிறிதானாலும் மரம் பெரிதாவது போல ஒருவனின் அறச் செயல் பயன் தரும். இன்னும் ஒரு இடத்தில் ஆலமரத்தைக் கறையான்கள் அரித்தாலும் அதன் விழுதுகள் அதைத் தாங்கி நிற்பது போல தந்தையை மகன் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும்.

மரம் வளர்த்தால், மனித குலம் தழைக்கும்

ஈ. வெ. ராமசாமி

ஈ. வெ. ராமசாமி

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 17, 1879

இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)

இறப்பு: டிசம்பர் 24, 1973

பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.

ஆரம்ப வாழ்க்கை:

தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின்  வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,
இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.

காசிக்கு பயணம்:

காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு  வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக
(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார், 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைது
செய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.

வைக்கம் போராட்டம்:

பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடை
விதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம்:

1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.

இந்தி எதிர்ப்பு:

1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.

பெரியாரின் திராவிட கழகம்:

பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:

பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு,  மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948  ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இறுதிகாலம்:

இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973  டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.

புனைபெயர்கள்:

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.

இறப்பு:

‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுய
சிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.

பலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.

காலவரிசை:

1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.

1898 – நாகம்மையாரை மணந்தார்.

1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.

1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.

1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.

1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.

1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.

1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.

1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.

1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.

1939 – நீதி கட்சி தலைவரானார்.

1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.

1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.

1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.

1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.